|

மருத்துவ பணியில் சோழர்கள்

Aug 28, 2025

" சோழர்கால ஆதுலர்சாலை -
      ஆதுரசாலை "

சோழர்காலத்தில் நோயுற்றவர்கள் சிகிச்சை பெறும் ஏராளமான மருத்துவமனைகள் இருந்ததை கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. அடிப்படை சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்தும் , பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவமனைகள் ஆதுலர்சாலை மற்றும் ஆதுரசாலை என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. நோயாளிகள் தங்கி சிகிச்சைபெற படுக்கை வசதிகள் இருந்தன. சிகிச்சை பெறுபவர்களுக்கு  உணவுகள் வழங்கப்பட்டன. போதுமான மருந்துகள் இருப்பில் இருந்தன. அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் அளிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் உறுதிசெய்யப்பட்டது.

கல்வெட்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனை விபரங்கள்.

தஞ்சை தேவராயன்பேட்டையில் சோழ இளவரசி குந்தவைநாச்சியார் ஒரு மருத்துவமனை கட்டினார். தனது தந்தையின் பெயரைச் சூட்டினார். சுந்தரசோழ விண்ணகர் ஆதுலர் சாலை என்று பெயரிட்டார். இம்மருத்துவமனை பராமரிப்புக்காக ஏராளமான நிலங்களை தானமாகக் கொடுத்தார்.

சிக்கலான அறுவை சிகிச்சை முறை மருத்துவம் சல்லியகிரியை என்றழைக்கப்பட்டது.
இச்சிகிச்சை அளிக்கும் மமருத்துவர்களுக்கு வைத்தியபோகம் என்னும் பெயரில் மிகப்பெரும் ஊதியம் வழங்கப்பட்டது.

 இச்சிகிச்சைக்கு கத்தி ,துணி, மருந்து  முதலான பொருட்களைக் கொண்டுவந்து சிகிச்சை செய்பவர் அம்பட்டன் என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தார்க்கும் பெரும் நிலங்களைத் தானமாக வழங்கினார் குந்தவைநாச்சியார்.

திருவிசலூர் கல்வெட்டு இச்செய்தியை பதிவு செய்கிறது.

" அம்பட்டன் அரையன் உத்தமச்சோழனான இராஜேந்திரசோழ பிரயோதரையன் என்பவருக்கும் இவரது வம்சத்தார்க்கும் ஒரு வேலி 4 மா நிலமும் ஒரு வீடும்  சல்லியபோகமாக வழங்கப்பட்டது "
( S.i.i.vol 23 no 350 - 351 )

மருத்துவர்களுக்கு ஊதியம், படுக்கை வசதி, நோயுற்றவர்களுக்கு இலவச உணவு, மருந்துகள் விபரம், ,சிகிச்சைமுறை  
இதுபோன்ற மருத்துவமனைகள் பற்றிய செய்திகளைப் பதிவு செய்யும் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்கூடல் என்னும் ஊரில் 950 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோழர்கால மருத்துவமனை செயல்பட்டது.இன்றைய
 Multispeciality Hospital என்று 
சொல்லப்படும் பல்நோக்கு உயர் மருத்துவமனையாகும். மருத்துவமனையின் பெயர்
 " வீரசோழன் ஆதுலர் சாலை "

இதுபற்றிய விரிவான விபரங்களை மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

பின்குறிப்பு - 
சோழர்காலத்தில் கல்லூரி இருந்ததா.? மருத்துவமனை இருந்ததா என்று பொங்குபவர்கள் சற்று அமைதி காக்கவும்.

✍ மா.மாரிராஜன்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us