காவிரி வரலாற்றில் சக்கரவர்த்தி கரிகாலன்
Dec 06, 2025
“கரிகால் சோழப் பேராறு”
*******************
காவிரி ஆற்றுக்கு “கரிகால் சோழப் பேராறு”
என்று பெயர் இருந்திருக்கிறது.
இதனை கி.பி.1890-லேயே கல்வெட்டுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைக் குறிக்கும் கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது.
“குலோத்துங்க சோழன் காலத்தில்
கரிகால சோழ கரையை பலப்படுத்த
‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.
மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் ஒரு மதகுப் பாலம் கட்டப்பட்டது.
குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர்தான் இந்த மதகு பாலத்தைக் கட்டி இருக்கிறார்.
இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கல்வெட்டு அழியாமல் இருக்கிறது.
இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது.