|

கீழடியில் வான சாஸ்திரம்

May 08, 2026

கீழடியின் கிழக்கு -  வானியலின் தொடக்கம்

 
அண்டத்தில் கோடனுகோடி நட்சத்திரங்கள்  உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நமது ஞாயிறு (சூரியன்).  ஞாயிற்றை புதன் வெள்ளி பூமி  செவ்வாய் வியாழன் சனி மற்றும் யுரேனஸ் நெப்டியூன் கோள்கள் சுற்றி வருகின்றன. 

            பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது.  இதனால் பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது விண்ணில் உள்ள நட்சத்திரங்களும் கோள்களும் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து 24 மணிநேரத்தில் பூமியை ஒரு சுற்றுச் சுற்றி வருவது போன்று நமக்குத் தெரியும்.  பூமியின் அச்சு 23.4 பாகை சாய்ந்துள்ளது.  பூமியின் வடதுருவத்திற்கு நேர் மேலே,  வடதுருவத்தின் உச்சந் தலைக்கு மேலே துருவ நட்சத்திரம் உள்ளது.    இதனால் பூமியில் எங்கிருந்து எப்போது பார்த்தாலும் இந்தத் துருவநட்சத்திரம் மட்டும் எவ்விதமான நகர்வும் இல்லாமல் அதே  இடத்தில் அப்படியே நிலையாகத் தெரியும்.   இரவோ பகலோ குளிரோ வெயிலோ துருவநட்சத்திரம் 365 ¼ நாட்களிலும் 24 மணிநேரமும் சரியாக வடதுருவத்திற்கு நேர் மேலே தெரியும்.   அதனால்தான் மாலுமிகள் நடுக்கடலில் இரவில் துருவநட்சத்திரத்தை அடையாளமாகக்கொண்டு வடதிசையைத் துல்லியமாகக் கணித்துக் கப்பல்களை ஓட்டிச் சென்றுள்ளனர்.






வான்வெளியில் மூன்றுவழிப் பாதை
பூமியைத்  திங்கள் (சந்திரன்) சுற்றி வருகிறது.  பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியன கோள்கள் வடிவில் விண்ணில் பூமியைச் சுற்றித்திரிவது போன்று நமக்குத் தெரியும்.   இவற்றை நாம் நமது வெறும் கண்களால் காணலாம்.  விண்ணில்  இவை சுற்றித்திரியும் வழித் தடத்தை மூன்று பாதைகளாகப் பிரிக்கலாம்.  இந்த 3 பாதைகளில்,  ஒவ்வொரு பாதையிலும் 9 நட்சத்திரங்கள்  வீதம், மொத்தம் 27 நட்சத்திரக்  கூட்டங்கள் உள்ளன. இந்த 27 நட்சத்திரக்கூட்டங்களின் வழியாக ஞாயிறும் திங்களும் மற்றபிற 5 கோள்களும் கிழக்குத் திசை நோக்கி ஊர்ந்துதிரிவது போன்று நம் கண்களுக்குத் தெரியும்.   

அருகில் உள்ள நட்சத்திரத்துடன் சந்திரனை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தின் வழியாகத் சந்திரன் பயணித்து 28ஆவது நாள் மீண்டும் முதல் நட்சத்திரத்துடன் சேர்ந்து தெரியும்.   அருகில் உள்ள நட்சத்திரத்துடன் சூரியனை ஒப்பிட்டுப் பார்த்தால் சூரியன் 365¼ நாட்களில் ஒரு சுற்றுச் (360 பாகை)  சுற்றி மீண்டும் அது இருந்த அந்த நட்சத்திரத்திற்கு அருகே சேர்ந்து விடும்.   

காலச் சக்கரம்

நாம் நம் வெறும் கண்களால் கோள்களைக் காணலாம். அவை நட்சத்திரங்கள் போன்றே தெரியும். ஆனால் நட்சத்திரங்கள் போன்று மினுமினுக்காமல் திடமான ஒளியுடன் தெரியும்.  தொடர்ந்து உற்றுநோக்கினால் கடிகாரத்தில் 12 மணிகளில்  பெரியமுள்ளும் சின்னமுள்ளும் வலமாக நகர்ந்து சுற்றித்திரிவது போன்று, சூரியனும் சந்திரனும் மற்றுமுள்ள 5 கோள்களும் 12 இராசிக் கட்டங்களுக்குள் உள்ள 27 நட்சத்திரங்களின் வழியாகச் வலமாக (கிழக்குத் திசை நோக்கி) நகர்ந்து சுற்றித்திரிவது தெரியும்.  12 மாதங்களில் 12 இராசிகளின் வழியாகச் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாகக் கடந்து செல்லும்.   மேஷராசியில் சூரியன் இருந்தால் அது சித்திரை மாதம்,  ரிஷபராசியில் சூரியன் இருந்தால் அது வைகாசி மாதம்,  ….  …. …. மீனராசியில் சூரியன் இருந்தால் அது பங்குனி மாதம்.  இப்படியாக 12  இராசிகளின் அடிப்படையில் 12 மாதங்களுக்கும் பெயர்களை வைத்துள்ளனர்.   




ஜாதகக் கட்டமும் – வானியல் வரைபடமும்

விண்ணில் காணும் கோள்களின் நகர்வுகளைக் கணித்து, அதை அப்படியே ராசிக் கட்டங்களில் எழுதிப் பயன்படுத்தி வருகின்றனர்.  ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள ராசிக்கட்டமானது அந்த  ஜாதகர்  பிறந்தநேரத்தில் இருந்த கோள்களின் நிலையைக் குறிப்பதாகும்.  பிறந்த நேரத்தில், பூமியில் இருந்து பார்க்கும் போது ஒவ்வொரு கோள்களும்  எந்தெந்த ராசியில் எந்தெந்த நட்சத்திரத்தில் இருந்தன என்ற வானியலின் வரைபடம் ஆகும்.   இதில் எந்த  ராசியில் சூரியன் இருக்கிறதோ,  அந்த மாதத்தில் அவர் பிறந்துள்ளார். எந்த நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில்  அவர் பிறந்துள்ளார்.  ஒருவர் பிறந்த லக்னத்தின் பாகையை வைத்து, பிறந்த நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.  இவ்வாறாக ஒருவரின் ஜாதகத்தைக் கொண்டு அவர் பிறந்த நேரம், நாள், மாதம், மற்றும் அன்றைய நாளில் கோள்களின் நிலை எனத் துல்லியமாக வானியல் நிலையை எளிதில் கூறிவிடலாம்.

ஆடு தலையாகவுள்ள ராசி மண்டலம்

12 ராசிகளில் முதல் ராசிக்கு மேஷராசி என்ற பெயர் என்றும், இரண்டாவது ராசிக்கு ரிஷபம் என்றும் …..  …. 12ஆவது இராசிக்கு மீனம் என்றும் பெயரிட்டுச் சொல்கின்றனர்.   இந்தப் பெயர் இன்று நேற்று உருவானதல்ல.  எகிப்து பாபிலோன் சுமேரியா  நாடுகளில் உருவானதும் அல்ல.  இது சங்ககாலத்தில் கூடல் என்ற மதுரையில் வாழ்ந்த சங்கத் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கிய வானியல் அறிவின் தொடக்கமாகும்.

சங்ககாலத்தில் பாண்டியனின் அரண்மனை அந்தப்புரத்தில் வளைவான விதானம் உள்ளது.  அதில் நுண்ணிய களிமண்ணைப் பூசி, அதற்குமேல் மெழுகு பூசி,  அதற்கு மேல் 27 நட்சத்திரங்களின் படங்களை 12 இராசிக் கட்டங்களில் வரைந்து வைத்துள்ளனர்.   அதில் “ஆடு தலையாக” உள்ளது.  சந்திரன் உரோகிணி நட்சத்திரத்துடன் சேர்ந்துள்ளான்.   ஆனால் சந்திரவம்சத்தில் தோன்றிய பாண்டியன் இன்னும் தன்னுடன் வந்து சேரவில்லையே! என்று தலைவி ஏங்குகிறாள்.   இந்தக் காட்சியை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் நெடுநல்வாடையில் பாடியுள்ளார்.   கோள்கள் சூரியனைச் சுற்றி இருப்பதைக் கண்டு ‘நல்லந்துவனார்’ பாடியுள்ளார். 

 


ஆவுடையார் கோயில் சிற்பத்தின் சிறப்பு

முத்தமிழ்ச் சங்கத்தின் தலைப்புலவன் நக்கீரன்  நேரில் கண்டு நெடுநல்வாடையில் பாடியுள்ள 27 நட்சத்திரங்களின் தோற்றத்தை அப்படியே அச்சு அசலாக ஆவுடையார் கோயிலில் சிற்பமாகச் செதுக்கி மாணிக்கவாசகர் சந்நிதியின்  மேல் நிலை விதானத்தில் வைத்துள்ளனர்.    சங்ககாலத்திலிருந்து  ஆவுடையார் கோயில்கட்டுமான காலம்வரை நமது முன்னோர்கள் தங்களது வானியல் அறிவைப் பாதுகாத்து வந்துள்ளனர் என்பதை அறிய வியப்பாக உள்ளது.

வருடத்தின் தொடக்கம் சித்திரை 1

திருப்பரங்குன்றம் அருள்மிகு முருகப்பெருமானின் வாகனம் ”ஆடு”.   ஆடு எப்படி ராசி மண்டலத்தின் தலையானது?




சூரியன் 365¼ நாட்களில் 12 ராசிகளில்  உள்ள 27 நட்சத்திரங்களைக் கடந்து ஒரு சுற்றுச் (360 பாகை)  சுற்றி மீண்டும் அது இருந்த அந்த நட்சத்திரத்திற்கு அருகே சேர்ந்து விடும்.  இந்தச் சுற்றில் முதல் ராசியான மேஷ (ஆடு, வருடை)  ராசியில்  உள்ள, முதல் நட்சத்திரமான அசுபதியில் சூரியன் சித்திரை 1 அன்று தோன்றும்.  வருடையில் (மேஷத்தில், ஆடு) சூரியன் தோன்றும் முதல்நாளான சித்திரை1 வருடத்தின் முதல்நாள்,  வருடப்பிறப்பு நாளாகும்.
சூரியன் உச்சம்

முதல் ராசியான சித்திரையில் சூரியன் உச்சம் என்கின்றனரே!  அது எப்படி?




சூரியன் உச்சம் பெறும்போது நிழல் தெரியாது.   சூரியன் உச்சியில் இருக்கும் நாளில்,   “நிழலற்ற வெயிலில்” தலைவி தலைவனுடன் செல்வதைச் சங்கப் புலவர் “பூதனார்” நற்றிணையில், “அழல் அவிர் நீள் இடை நிழல் இடம் பெறாஅது” என்ற பாடலடிகளில் காட்சிப் படுத்திப் (பாடல் எண்: 29) என்று பாடியுள்ளார். புலவர் பூதனார் பாடியுள்ளபடி, நிழல் இடம் பெறாத  ஊர்கள் எந்த அட்சரேகையில் உள்ளன? 
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 21-22 நாளில் சூரியன் மகரரேகையில் உள்ள ஊர்களில் உச்சந்தலைக்கு மேலே தோன்றும்.  பின்னர்  சூரியன் வடக்கு நோக்கி  நகர்ந்து, மார்ச் 21-22  நாட்களில் பூமத்தியரேகையில் உள்ள ஊர்களில் உச்சந்தலைக்கு  மேலே தோன்றும்.  அதன்பின்னர் சூரியன் மேலும் வடக்கில் நகர்ந்து ஜுன்  21-22 நாட்களில் கடகரேகையில் உள்ள ஊர்களில்  உச்சந்தலைக்கு மேலே தோன்றும்.  இவ்வாறாகச் சூரியன் வானியல் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அட்சரேகையில் உள்ள ஊர்களின் மேலே உச்சம் பெற்றுத்  தோன்றும்.   அந்த நாட்களில் அந்த ஊர்களில்  ”நிழல் இடம் பெறாஅது”.   

அப்படியானால் சங்கத் தமிழர்கள் வாழ்ந்த  கூடல் என்ற மதுரையில் உச்சந்தலைக்கு மேலே சூரியன் எந்த நாளில் உச்சம் பெற்றுத் தோன்றும்?  

இந்தக் கேள்விக்கு விடைகாண முதலில் கூடல் என்ற மதுரை எங்கேயுள்ளது? என்று  கண்டறிய வேண்டியுள்ளது.

எங்கே உள்ளது நம் கூடல்

            சங்கம் வைத்துத்  தமிழ் ஆராய்ந்த புலவர்கள் வாழ்ந்த,  விண்மண்டலத்தில் கோள்நிலைகளைத் துல்லியமாகக் கணித்துப் பாடியுள்ள புலவர்கள் வாழ்ந்த கூடல்  மாநகரம் எங்கே உள்ளது?

கூடல் நகரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியநாட்டைச்  செழியன்  ஆண்டு கொண்டிருக்கிறான்.  கூடல் மாநகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளது.  அங்கு திருவிழாக்கள் ஓய்வில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   முருகப்பெருமானின் வெற்றியை உடைய மயில்கொடி உயரப்  பறக்கிறது.   அந்த மயில்கொடியைக் கண்டு செழியனின் கொடி நுடங்கி வணக்கம் செலுத்துகிறது.    இதை “……அடுபோர்ச் செழியன்,  கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,  பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,  ஒடியா விழவின்,நெடியோன் குன்றத்து…..”  என்று (அகநானூறு-149)  எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியுள்ளார்.  இந்தப் பாடல்வரிகளால் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே  கூடல்  மாநகர் இருந்துள்ளது  உறுதியாகியது.

கண்ணகி கூடல் மாநகரை எரித்த பின்னர்,  அங்கே எஞ்சியிருந்த மக்கள்  அவர்களது பண்டைய தலைநகரான ”ஆலவாய் என்ற மதுரை”  இருந்த இடத்தைக்  கண்டறிந்து, அங்கே புதிதாக மதுரை நகரை (இன்றைய மதுரை) உருவாக்கிக் குடிபெயர்ந்து சென்று விட்டனர்.  கூடல் கைவிடப்பட்ட நகரமாகிவிட்டது.   




கீழடியின் கீழே கூடல்
பின்னாளில் கடல்கோள் (பெருஞ் சுனாமி) உண்டாகி இப்போதுள்ள மதுரையின் “எழுகடல் தெரு” வரை கடல் வந்து அழித்துவிட்டது. எழுகடல்தெருவரை வந்த கடல்வெள்ளத்தால் (சுனாமியால்) வையை ஆறும்,  வையை ஆற்றின் கரையில் இருந்த கூடல் மாநகரமும் மண்ணால் மூடப்பட்டு விட்டன.    கடல்நீர் வடியும் போது, மண்மூடிய வையை ஆறு  தடம்மாறி வைகை  என்ற பெயரில்  கீழடிக்கு வடக்கே சுமார் 2  கி.மீ. தொலைவில் ஓடுகிறது.

  மண்மூடிய கூடல் மாநகரைத் தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் அவர்கள் கண்டறிந்து தோண்டி வெளிக்கொணர்ந்து விட்டார்.   இதனால் சங்கப்பாடல்களில் மட்டுமே இருந்த கூடல் மாநகரம் இன்று புத்துயிர் பெற்றுவிட்டது. 






கீழடியின் கிழக்கு - வானியல் சிறப்பு

கூடல் மாநகரம் மண்மூடிக் கீழடிக்குக் கீழே புதைந்துள்ளது.   இதன் புவியியல் இருப்பிடம்:  9° 51' 40" வடஅட்சரேகை, 78° 11' 50" கிழக்குத் தீர்க்கரேகை ஆகும்.   இந்த அட்சரேகையில் இரண்டு முறை சூரியன் உச்சம் பெற்றுத் தோன்றும்.  சூரியன் பூமத்தியரேகையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது (உத்தர அயண காலம்) ஒருமுறையும், தெற்கு நோக்கி வரும்போது (தட்சிண அயண காலம்) மற்றொருமுறையும் என ஆண்டுக்கு இரண்டு முறை கீழடிக்கு நேர் மேலே சூரியன் உச்சம் பெறுகிறது.

வானியல் அட்டவணைகளின்படி, சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே நகரும்போது, சித்திரை 1 (ஏப்ரல் 14) நாளில் சூரியன் கீழடிக்கு நேர்  மேலே வரும்.  சூரியன் கடக ரேகையிலிருந்து தெற்கே நகரும்போது, ஆவணி 13 (ஆகஸ்ட் 30) நாளில் மீண்டும் இந்த அட்சரேகைக்கு நேர் மேலே வரும்.

பூஜ்ஜிய நிழல் நாள் (Zero Shadow Day): இந்த இரண்டு நாட்களிலும், சூரியன் உச்சிப் பொழுதில் (Local Noon), கீழடியில் (கூடல் நகரில்) உச்சந்தலைக்கு நேர் மேலே சூரியன் உச்சம் பெற்று இருக்கும்.  இதனால் நிழல் வெளியே தெரியாது. 





இதனால் சித்திரை-1   அன்று கீழடியில் (கூடல்  என்ற மதுரையில்) உச்சிவெயிலில் நிழல்  விழாது.
முடிவுரை

சங்ககாலத் தமிழர்களின் வானியல் அறிவும் புவியியல் கணிப்புகளும் வெறும் கற்பனையல்ல; அவை மிகத் துல்லியமான அறிவியல் உண்மைகள் ஆகும். அண்டத்தில்  கோள்களின் நகர்வுகள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களின் வழியாகக் கோள்கள் பயணிக்கும் பாதையைத் துல்லியமாகக் கணக்கிட்ட நம் முன்னோர்களின் அறிவு வியப்பளிக்கிறது.

'ஆடு தலையாக' அமைந்த ராசி மண்டலம் குறித்து நக்கீரர் பாடிய நெடுநல்வாடைப் பாடலும், ஆவுடையார் கோயில் சிற்பங்களும் தமிழர்களின் தொன்மையான வானியல் அறிவின் தொடர்ச்சியைப் பறைசாற்றுகின்றன. 

கீழடியில் (கூடல் மாநகரின்) சித்திரை-1 அன்று சூரியன் உச்சம்.  புலவர் பூதனார் பாடிய   “அழல் அவிர் நீள் இடை நிழல் இடம் பெறாஅது” (பூஜ்ஜிய நிழல் நாள் - Zero Shadow Day) என்ற அறிவியல் நிகழ்வு, பண்டைய மதுரை நகரான 'கூடல்' மாநகரத்தோடும் சித்திரை—1 நாளோடும்  எவ்வாறு தொடர்புடையது என்பது பிரமிக்க வைக்கும் உண்மையாகும். தொல்லியலாளர்களால் கீழடிக்குக் கீழே கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கிய ஆய்வுகள் மூலம்  சங்ககாலக் கூடல் மாநகரம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியின் அமைவிடமான 9° 51' 40" வட அட்சரேகைக்கும், சித்திரை 1 (ஏப்ரல் 14) மற்றும் ஆவணி 13 ஆகிய தேதிகளில் சூரியன் சரியாக உச்சம் பெற்று நிழல் விழாத நாளாக அமைவதற்கும் உள்ள துல்லியமான அறிவியல் தொடர்பு, பண்டைய தமிழர்களின் அளப்பரிய புவியியல் மற்றும் வானியல் அறிவை உறுதி செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஆடு தலையாக உள்ள 12 இராசிகளைக் கொண்ட வானியல் அறிவு எகிப்து பாபிலோன் சுமேரியா  நாடுகளில் உருவானதும் அல்ல. அது கீழடியின் கீழே புதைந்துள்ள கூடல் மாநகரில் வாழ்ந்த நமது சங்கப் புலவர்களின் அறிவாகும்.  தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள கீழடி என்பது வெறும் பானையோடுகளும் செங்கல் சுவர்களுமான தொல்லியல் களம் மட்டுமல்ல; அது பண்டைய தமிழர்களின் பெருமைமிகு வானியல் அறிவின் தொடக்கப் புள்ளி என்பதை நாம் பெருமையோடு உணரலாம்.

இதெல்லாம்  சரி, ஆனால் “12 ராசிகள்”  என்பதில்,  “ராசி” என்பது தமிழ்ச் சொல் இல்லையே என்று கேட்கின்றனர்.   அற்கான தூய தமிழ்ச் சொல் “ஓரை” ஆகும் என்று சில  நண்பர்கள் பதில் சொல்லியுள்ளனர்.  வாருங்கள் இனிவரும் நாட்களில் இது குறித்து ஆராய்ந்து அறிவோம்.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us