ஆன்மீகம்
Jul 07, 2022
*பன்னிரு திருமுறைகள் – 091*
*முதல் திருமுறையில் பாடிய பாடல் | தேவாரம்*
428. பூண்நெடு நாகம் அசைத்து அனல்ஆடிப்
புன்தலை அங்கையில் ஏந்தி
ஊண்இடு பிச்சைஊர் ஐயம்
உண்டி என்று பலகூறி
வாள்நெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.
*தெளிவுரை* :
நீண்டு வளர்ந்த நாகத்தை ஆபரணமாகப் பூண்டும், அனலைக் கரத்தில் ஏந்தியும் ஆடிப் பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்கும் பாவனையில் பல சொற்களைக் கூறி, வாளைப் போன்று கூரிய நோக்குடைய கண்களைக் கொண்ட உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் இறைவன். அவ் இறைவனின் தாளினை மலர்களால் போற்றி வணங்கி அடைக்கலம் ஆவோம்.
429. தார்இடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேல் அவை சூடி
ஊர்இடு பிச்சைகொள் செல்வம்
உண்டி என்று பலகூறி
வார்இடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கார்இடு மாமலர் தூவிக் கறைமிடற் றான்அடி காண்போம்.
*தெளிவுரை* :
கொன்றை மாலை, வெண்மதி, கங்கை ஆகியவற்றைச் சடைமேல் சூடி, ஊரில் பிச்சை இடுமாறு பலவற்றைக் கூறி, உமையை ஒரு பாகம் உடையவன் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அவனடியை, மலர் தூவிப் போற்றிக் காண்போம்.
430. கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து ஊர்
புகுதி என்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெரு மானடி சேர்வோம்.
*தெளிவுரை* :
பொன்போன்ற பெருமை மிக்க கொன்றை மாலை விளங்கவும், காதில் வெண்குழையும் அணிந்து, காட்டு மலர்களையும் புனைந்து சூடி ஊரில் பிச்சை கொள்ளுமாறு பல கூறி, உமாதேவியை ஒரு பாகம் கொண்டு, வாழ்கொளி புத்தூரில் உள்ளவன் ஈசன். அர்ச்சனை செய்வதற்குரிய மலர்களால் அப்பெருமான் திருவடியைப் போற்றிச் சரணடைவோம்.
431. அளைவளர் நாகம் அசைத்து அனல்ஆடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யில்பலி கொள்ளும்
கருத்தனே கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளைஅவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம்.
*தெளிவுரை* :
புற்றில் வளரும் நாகத்தையும், அனலையும் அசையுமாறு ஆடி, பிரமனின் கபாலத்தைக் கரத்தில் ஏந்தி, வளையலை அணிந்த உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசன், வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அப்பெருமானை என் கருத்திற்கிசைந்த தலைவனே ! உள்ளம் கவர்ந்த கள்வனே ! என்று போற்றி, நன்கு விரிந்த மலர்களால் திருவடியை அர்ச்சனை செய்து சார்ந்திருப்போம்.
432. அடல்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
அழிதலை அங்கையில் ஏந்தி
உடல்இடு பிச்சையோடு ஐயம்
உண்டிஎன்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணயொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமலர் ஆயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம்.
*தெளிவுரை* :
அடர்ந்த காதுகளை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தும், தலையோட்டைக் கையில் ஏந்திப், பிச்சை, ஐயம், உண்டி தருவீர் எனப் பலவாறு கூறியும், நீண்ட இதழ்களை யுடைய மலர்க் கண்களைக் கொண்ட உமாதேவியைப் பாகம் வைத்தவன், வாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானைப் பெருமை மிக்க மலர்களால் தூவி வழிபட்டு அவன் தான் நிழல் சார்வோம்.🙏ஆன்மீக சேவையில்🙏🙏அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏🙏🙏