தமிழ் இலக்கியத்தில் தமிழர்
Jun 11, 2024
தமிழ் மொழி பேசும் மக்களை "தமிழர்" என்று அடையாளப்படுத்தும் சங்க இலக்கிய குறிப்புகள் ஏதும் இருந்தால் மேற்கோள் காட்டவும்" என்று சொல்லாய்வுக் குழுவில் கேட்டார் நண்பர் Vithurson Subasharan
தமிழ்க்குடிகள் என்பது தமிழர் என்ற பொருள் தரும் அல்லவா? அப்படியென்றால் தமிழ்க்குடிகள் என்ற சொல்லாடல் பரிபாடலில் பயின்று வருகிறது.
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள் [பரிபாடல் - 30:5]
தமிழ்நாடு என்ற சொல்லாடல் பரிபாடலில் அடுத்து வருகிறது.
தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் [பரிபாடல் - 31:1]
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?
மாமூலனார் "தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஅம்" என்கிறார். அது அகநானூற்றில் வருகிறது [31:14-15].
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் [31:10-15]
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்று மூவேந்தர்களால் ஆளப்பட்டிருந்தாலும் தமிழ் பேசுவோர் அனைவரும் "தமிழ்நாட்டினர்" என்ற தமிழ்த்தேசிய உணர்வு சங்கப்பாடல்களில் தெளிவாகத் தெரிகிறது.
இது அறிஞர்கள் அறிந்த செய்தி. ஆனால் பொதுவாகப் பலருக்குத் தெரியாதது என்பதால் பரப்புவது நல்லது என்றார் இன்னொரு நண்பர். பரப்புக. :-)