4 கோடி பாடல்கள்
Jul 28, 2024
ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்
ஒரு நாள் சோழமன்னர் புலவர்களின் புத்திக் கூர்மையைச் சோதிக்க எண்ணினார். "நாளை பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல்கள் எழுதி வர வேண்டும்" என்று புலவர்களுக்கு உத்தரவிட்டார்.
நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது? புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றார்கள்.
அந்த சமயம் அங்கே வந்த ஒளவையார் புலவர்களைப் பார்த்து “என்ன வருத்தம்?” என்று கேட்டார். புலவர்களும் அரசனின் உத்தரவை சொல்லி நான்கு கோடிப்பாடல்களுக்கு எங்கு செல்வோம் என்று இழுத்தார்கள்.
அவ்வையார் புன்முறுவலுடன் “இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்றுகூறி நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுத்தார்.
புலவர்கள் தயங்கி நிற்க, ஒளவையார் “ஒவ்வொரு பாடலும் ஒருகோடி மதிப்புடையது. சென்று உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
அவர் எழுதிய நாலுகோடி பாடல் இதுதான்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
பொருள் : தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"
பொருள் : உண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
பொருள் : கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
பொருள் : எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.
புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசித்தார்கள் , மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் ஒளவையார்தான் இயற்றியிருக்க முடியும் என்பதனை உணர்ந்தார். புலவர்களிடம் இந்தப்பாடலை இயற்றியது ஒளவையார் தானே என வினவ அனைவரும், ‘ஆமாம்.. ஒளவையார் இயற்றியதுதான்’ எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து ஒளவையாரை அழைத்தார். ஒளவையாருக்குப் பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் .
🙏
www.araiyarsuvaranmaran.com