முத்தரையர் வரலாற்றில் வாகை மரம்
Oct 29, 2024
*தமிழக வரலாற்றில் வாகைப்பூ*
போரில் வெல்லும் வீரர்கள் சூடும் வாகை மலர்
தாவரவியல் பெயர் : அல்பிசியா லெப்பெக்
குடும்பம் : ஃபபேசியா
வாகை மரம் 5-20 மீட்டர் உயரம் வளரும தன்மையுடையது.
வாகை வகைகள் :
வாகையில் சிறுவகை ,பெருவாகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்குவாகை என பல வகைகள் உள்ளன.
சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்கள் வாகை மலர் சூடி வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. தற்போது கூட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை "வெற்றி வாகை சூடினார்" என்று அழைப்பதையும், புகழ்வதையும் கேட்க முடியும் ,அவ்வகையில் வாகைப்பூ தமிழர்களின் வெற்றியின் அடையாளமாக உள்ளது.
"போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வாகை மலர்க் கொத்தாகும். வாகைப்பூவை வெற்றிப் பூ என்பர். வாகைப் பூ தமிழ் கடவுள் கொற்றவைக்கு உரியதாகும்"
*முத்தரையர் வரலாற்றில் வாகைப்பூ*
தஞ்சாவூர் மாவட்டம் ,திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் 1500 ஆண்டுகள் பழமையான திரு நியமம் மாகாளத்து காளா பிடாரி எனும் கொற்றவை ஆலயம் உள்ளது. தற்போது இத்திருக்கோயில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.
பேரரசர் இரண்டாம் பெரும்பிடு முத்தரையர் சுவரன்மாறன் எனும் வேந்தர் தான் போருக்கு செல்லும் போது கொற்றவை மாகாளத்து காளா பிடாரியை வணங்கி ,
அப்பிடாரியின் ஆசியோடு போருக்கு செல்லும் போது வாகைப்பூ சூடி செல்வார்.
தமிழக வேந்தர்கள் போரில் வெற்றி பெற்ற பிறகு தான் வாகைப் பூவினை சூடுவார்கள். ஆனால் கொற்றவை மாகாளத்து காளா பிடாரியிடம் இள வயதிலேயே வேல் பெற்று , வேல் மாறன் எனும் சிறப்பு பெயர் கொண்ட பேரரசர் சுவரன்மாறன் ( படாரிடம் வேல் பெற்றவர்கள் இருவர் ஒருவர் முருகப்பெருமான் மற்றொருவர் பேரரசர் சுவரன்மாறன்- இருவருமே தமிழ் பற்றாளர்கள்) போருக்கு செல்லும் போதே கொற்றவை காளா பிடாரி ஆசி வழங்கிய காரணத்தால் வாகைப்பூ சூடிச் சென்று , 16 க்கும் பேற்பட்ட போரில் வெற்றி பெற்றார்.
தோல்வியே காணாத வேந்தர் என்றால் அது பேரரசர் சுவரன்மாறன் அவர்களையே குறிக்கும்.
அப்பேரரசர் தனது வெற்றிச் செய்திகளையும்,
நிர்வாக சாதனைகள் மற்றும் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை எல்லாம் கல்வெட்டு தூண்களில் பதிவு செய்தார்.
அக்கல்வெட்டு தூண்களே தமிழக வரலாற்றில் தமிழுக்கு முதல் மெய்க்கீர்த்தி கண்ட கல்வெட்டு தூண்களாகும். அக்கல்வெட்டு தூண்கள் நேமம் பிடாரி கோயில் அழிவிற்க்கு பிறகு தற்போது செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மகாமண்டபத்தில் பாதுகாப்பாக இன்றும் வைக்கப்பட்டு உள்ளது.
"*வஞ்சிப்பூ சூடிய வாளமருள் வாகைப்பூக் கமழ் கண்ணிக் கோமாறன் - தஞ்சைக்கோன் கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான் தோளா லுகளிளிக்குந் தோள்*"
மேற்க்கண்ட பாடல் பேரரசர் சுவரன்மாறன் கொடும்பாளூர் பெற்ற வெற்றியை கொண்டாடும் போது புலவர் பெருமான் வேந்தரின் வீரத்தை புகழும்போது மேற்கண்டவாறு புகழ்கிறார்.
*தமிழ் இலக்கியங்களில் வாகை மலர்*
மிக மெல்லிய இழைகளாலான மயில்களின் தலையில் இருக்கும் கொண்டை போல் உள்ள இந்த வாகை மலர் இலக்கிய பாடல்களில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகை என்பது வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
வாகை என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம்" எனக் குறிப்பிடுவது வாகை என்பது வெற்றியின் அடையாளம் என்பதனைத் தெளிவுபடுத்தும் குறிப்பாகும்.
போர்களில் வெற்றி பெற்றவர்கள் ‘வாகை’ சூடியவராவர்.ஆனால் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் போருக்கு செல்லும் போதே வகைப்பூ சூடும் வழக்கம் கொண்ட மாவீரர்.
“வடவனம் வாகை வான்பூங் குடசம்”
என்று குறிஞ்சிப் பாட்டு பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.
வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும் என்பதை,
"குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும்"
என்ற குறுந்தொகையின் பாடல் வரிகள் மூலம் அறிய முடியும்.
வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும் என்பதை "மென் பூ வாகை புன் புற கவட்டு இலை " என்ற அகத்திணை பாடல் வரிகள் உணர்த்துகின்றது.
சிற்றரசன் நன்னனது கொங்கண நாட்டில் வாகை மரம் மிகுதி. அவன் வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டான். அதனைக் கழங்காய்ச் சென்னி நார் முடிச் சேரல் என்ற மற்றொரு சிற்றரசன் வெட்டி வீழ்த்தினான். இதை,
“பொன்படு கொண்கான நன்னன் நன்னாடு ”
“பொன்அம் கண்ணி பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்”
என்ற வரிகள் மூலம் அறிய முடியும். இலக்கியப் பாடல்களில் வாகை மலர் பற்றி அதிகமான குறிப்புகள் உள்ளன.
தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை துவக்கிய திரு விஜய் அவர்கள் தனது கொடியில் வாகைப்பூ வினை இடம் பெற செய்துள்ளார். வாகை மரம் மருத்துவ குணங்கள் கொண்ட மரமாகும்.
தமிழர்களின் பான்பாடு ,கலாச்சாரம் மற்றும் வீரத்தோடும் கலந்த வாகை மரத்தை போற்றுவோம்.
கட்டுரையாளர் :
*பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன் ,
நிர்வாக அறங்காவலர்,அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை*, திருச்சி*.
அலைப்பேசி : 9600569891,9442146182*
www.araiyarsuvaranmaran.com