இராசேந்திரன் முத்தரையர் சோழன் அவதார திரு நாள்
Jul 23, 2025
" அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி "
இராஜேந்திர சோழரின் கடாரபடையெடுப்பு 1000 மாவது ஆண்டு. ( 1025 - 2025)
கி.பி.10 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சோழர்களின் கடற்படை உலகளவில் பரவலாக பேசப்பட்டது. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரப்பகுதி முழுவதும் சோழமண்டலக்கரை என்று பெயர் பெற்றிருந்தது. சுமார் 1076 கி.மீ. நீளமுள்ள இக்கடற்கரைப் பரப்பு முழுவதும் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
முதலாம் பராந்தக சோழன் (கி.பி - 907-953) காலத்தில் இலங்கையின் மீது கடற்படையெடுப்பு நடந்தது.
கி.பி.993 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுப்பு நடத்தி சிங்களர்களை வென்று இலங்கையின் வடபகுதி முழுவதையும் கைப்பற்றினார். இக்கடற் போரில் சோழர்களின் மிகச்சிறந்த கப்பல் படை பங்கேற்றது. நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் கப்பல்கள் மூலம் பாலம் கட்டி இலங்கையை இராஜராஜன் வென்றதாக திருவாலங்காடு செப்பேடுகள் பதிவு செய்கின்றன.
முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழ கடற்படை உலகத் தரத்துடன் மிகச் சிறந்த கட்டமைப்பு பெற்று தனித்துவமான பெயரும் பெற்றிருந்தது.
இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் இராஜேந்திரனின் சோழர் கடற்படை வென்றது அயல்நாட்டுக்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் என்ற பெருமை இராஜேந்திர சோழனைச் சாரும் என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு.
அலைகடல் நடுவே பல கலஞ்செலுத்தி இந்த நாடுகளை வென்றதாக இராஜேந்திரனின் கல்வெட்டுகள் கூறுகிறது.
இராஜேந்திரனின் இந்தப் படையெடுப்பின் நோக்கம் தனது சோழநாட்டு வணிகர்களின் நலன் சார்ந்ததாக இருந்தது.
சோழநாட்டு வணிகர்கள் ஸ்ரீவிஜய துறைமுகத்தைக் கடந்து சீனதேசம் வரை சென்று வணிகம் செய்தனர்.
தமிழகம் - சீனா வரை உள்ள கடற் பாதையில் உள்ள மிக முக்கியத் துறைமுகம் ஸ்ரீவிஜயம் ஆகும்.
கி.பி.1015 ஆம் ஆண்டு.
சீன அரசர் Ma - twan - lin
காலத்தில் இராஜராஜனின் ஆவணங்கள் தாங்கிய வணிகத் தூதுக்குழு ஒன்று சீனா சென்றதாக சீன நாட்டு ஆவணங்கள் பதிவு செய்கின்றன. இந்த ஆவணங்கள் இராஜராஜனை Lo - cha - lo -cha என்றழைக்கிறது.
இராஜேந்திரன் காலத்திலும் வணிகத் தூதுக்குழு ஒன்று சீனா செல்கிறது. இராஜேந்திரனை சீன ஆவணங்கள்
Shi- li - lo - cha என்றழைக்கிறது..
சோழநாடு சீனாவுடன் கொண்ட வணிகத் தொடர்பில் ஸ்ரீவிஜயம் ஏதேனும் தடைகளைச் செய்ததாலே தன் வணிகர்களின் நலம் காக்கவே இராஜேந்திரனின் கடார படையெடுப்பு என்பது ஆய்வாளர்கள் முடிவு.
ஸ்ரீவிஜயத்தை சோழர்கள் தாக்கியபோது சீனாவிற்கு எந்த வணிகக் கப்பலும் செல்லவில்லை.
போர் முடிந்தப்பிறகே 1028 ஆம் ஆண்டில்
ஸ்ரீவிஜய தூதுக்குழு சீனா சென்றது.பிறகு சோழர் தூதுக்குழுவும் சென்றது. பிறகே தமிழர்களின் வணிகக் கப்பல்கள் ஸ்ரீவிஜயம் வழியே சீனா வரை சென்றது.
( Svuarnadvipa. by - Dr.c. majumdar.)
ஸ்ரீவிஜயப் பகுதிகளில் கடற்கொள்ளையகளின் ஆதிக்கம் மிகுந்து சோழநாட்டு வணிகக் கப்பல்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாயின. ஸ்ரீவிஜய அரசு கடற்கொள்ளையர்களை ஒடுக்காமல் கடற்கொள்ளையருக்கு உதவி செய்துள்ளனர். ஸ்ரீவிஜயத்தில் அப்போது ஏற்பட்ட வாரிசுரிமை போர்களும் இப்பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தன.
ஸ்ரீவிஜயத்திற்கு பாடம் புகட்டி, கடற் கொள்ளையர்களை ஒடுக்கி தனது சோழநாட்டு வணிகர்களின் நலம் காக்கவே இராஜேந்திரசோழன் ஸ்ரீவிஜயத்தின் மீது தாக்குதல் தொடுத்தார் என்பதும் அறிஞர்கள் கருத்து.
அன்றைய ஆசியாவின் மிகச்சிறந்த கடற்படைகளைக் கொண்டதாக மூன்று பேரரசுகளை வரையறை செய்கின்றனர்.
சீனாவின் தாங் அரசமரபு,
பாக்தாத் அப்பாசீக கலீபகம்
மற்றும் சோழர்கள்.
இம்மூன்று பேரரசுகளே அன்றைய மிகச்சிறந்த கடல் வணிகம் மற்றும் கடற்படை கட்டமைப்புகளைக் கொண்டிருந்தன.
உலகளவில் பெரிதும்பேசப்பட்ட சோழர்களின் கடற்படை பற்றிய விபரங்கள் தமிழக கல்வெட்டு சாசனங்களில் பெருமளவு கிடைக்கவில்லை என்றாலும் சமகால அயல் நாட்டு ஆவணப்பதிவுகளில் இவ்விபரங்கள் காணக் கிடைக்கின்றன.
கடற்கரைக் காற்று,
அது விசும் திசை, கடற்பாதை என்று அனைத்திலும் சோழக் கடலோடிகள் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளார்கள்..
கடற்காற்றை ----
ஈழக்காற்று ,
சோழக்காற்று,
கன்னிக்காற்று,
கச்சன் காற்று
என்று வகைப்பிரித்துள்ளனர்.
காற்று வீசும்திசை மற்றும் கடல் நீரோட்டம் பற்றியும் தெளிவு பெற்றிருந்தனர்.
தென்மேற்கு பருவ கடல்நீரோட்டத்தை சோளி என்றும் தென் மேற்கிலிருந்து வடகிழக்கான நீரோட்டத்தை சோளி மீமாரி என்றும் மேற்கிலிருந்து கிழக்கை மேம்மாரி என்றும் அழைக்கப்பட்டதாக. B. அருணாச்சலம் அவர்கள் எழுதிய Chola navigation package என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்..
கடல்நீரோட்டம் பற்றிய உயர் அறிவு சோழக் கடலோடிகளுக்கு இருந்தது. திசை அறியும் தொழில்நுட்பமும் அவர்களுக்கு அத்துப்படி.
நாகை - கடாரம் 84 யாமம் பயணத்தொலைவு. அதாவது நாகையிலிருந்து புறப்பட்டு 15 நாட்களில் ஸ்ரீவிஜயத்தை அடையலாம் என்கிறார்கள்.
சோழர்களின் கடற்படையில் எத்தனைக் கப்பல்கள் இருந்தன.? அவற்றுக்கு என்ன பெயர்.? அதன் தளபதிகள் வீரர்கள் பற்றிய விபரம்.? கப்பல்கள் வடிவம்.? படை நகர்வு? உணவு, ஆயுதங்கள், மருத்துவ வசதிகள் பற்றிய விபரம்.? இவை போன்ற விபரங்கள் அனைத்தும் அயல்நாட்டு ஆவணங்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
முற்காலச் சோழர்களின் கடற்படையெடுப்பில் பயன்படுத்திய கப்பல்களின் பொதுப்பெயராக சொழாந்தியம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது.
இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவைகள் மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
(K.M.Panikkar in "geographical factors in indian history",
The Colandia type of vessels were employed for voyages between the Coramandel coast on the one hand and the Gangetic delta and Khryse
Ramchandran, Dr A. (23 October 1996). "The cultural history of Lower Kṛṣṇa Valley: its contacts with Southeast Asia".)
பிற்காலச் சோழர்களின் போர்க்கப்பல்கள் கீழ்கண்ட பிரிவுகளாக. வகைப்படுத்தப்பட்டன.
கண்ணி -
சிறி வகை போர்க்கப்பல்.
அதிக பட்சம் ஐந்து கப்பல்கள் இப்படைப்பிரிவில் இருக்கும். மிக வேகமாகச் செல்லும் . எதிரிகளின் கடற் பகுதியில் உள் நுழைந்து உளவு வேலைகள் பார்க்கும். எதிரிக் கப்பல்களின் எண்ணிக்கை அவற்றின் ஆயுத பலம் போன்ற விபரங்களைச் சேகரிக்கும். தேவைப்படின் சிறிய வகைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளும். இப்படைப்பிரிவின் தலைவர் களபதி என்னும் பெயரால் அழைக்கப்படுவார்.
தளம் -
நிரந்தரமான போர்க்கப்பல்பிரிவு அமைப்பாகும். இதன் தலைவர் ஜலதளதிபதி என்றழைக்கப்படுவார்.
5 பிரதான போர்க்கப்பல்கள்,
3 ஆயுத விநியோக கப்பல்கள்,
1 அல்லலது 2 உணவு ,தண்ணீர்
மற்றும் மருந்துப்பொருட்கள் அடங்கிய கப்பவ்களின் மொத்தத் தொகுப்பாக இப்படைப்பிரிவு இருக்கும்.
மிகக் குறுகிய காலத்தில் கடற் போருக்கு தயாராகும் முன்னேற்பாட்டில் இருக்கும்.
புலனாய்வு, சுற்றுக்காவல், வழிமறிப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும்.
பூரணமாக ஆயுதந்தரித்த
கப்பல் படைப்பிரிவாகும.
மண்டலம் -
மிகப்பெரும் கடற்படைப் பிரிவு. . வெளிநாட்டு படையெடுப்பிற்காக பயன்படுத்தப்படும் போர்க்கப்பலாகும். இப்படைப்பிரிவின் தலைவர் மண்டலதிபதி என்றழைக்கப்படுவார். 40-50 கப்பல்கள்களை கொண்டதாக இப்படைப்பிரிவு இருக்கும்..
இவை தனி சண்டைப் பிரிவாக மற்றும் அபாயகரமான ஆழ் கடல் நடவடிக்கைகளுக்கு பயன்படும். கடற்போரின்போது இக்கப்பல்களே முதலில் தாக்குதலைத் தொடுக்கும்.
கனம் -
100 -150 கப்பல்களைக் கொண்ட படைப்பிரிவு. இப்படைப்பிரிவின் தலைவர் கனதிபதி என்றழைக்கப்படுவார்.
மண்டலம் கப்பல் படை பிரிவுக்கு பின்புற எல்லையை சூழ்ந்து செல்லும். அதிவேகமாக எதிரிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. முழுமையாக அனைத்துவகை ஆயுதங்களையும் கொண்ட கப்பல்.
அணி -
3 கனங்களின் தொகுப்பு அணி வகை கப்பல்பிரிவாகும். 300 - 500
கனம் கப்பல்களின் தொகுப்பு அனி என்றழைக்கப்படும்.
ஒட்டுமொத்த கப்பற் படைத்தலைவர் அரசனேயாவார்.
கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார். இவரே கடற்படையின் முதன்மைத் தலைவர் ஆவார்.
போர்க்கப்பல்களின் படைத்தலைவர் நாயகன் என்ற பெயரால் அழைக்கப்படுவார். கடற்படையின் துணைத் தலைவர் இவரே.
போர்க்கப்பல்களின் தனித்தனி படைப்பிரிவுகளின் தலைவர் கனதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார்.
கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரி இவர்.
குழு படைத்தலைவர் மண்டலதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார். கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரி.
ஒவ்வொறு தனிக்கப்பல் படைத்தலைவர் கலபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார்.
கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி காப்பு என்ற பெயரால் அழைக்கப்படுவார்.
கப்பலோட்டிகளின் பொறுப்பதிகாரி சேவை என்ற பெயரால் அழைக்கப்படுவார்.
ககப்பல் இயக்கம் மற்றும் பழுது நீக்கும் பொறியியல் அதிகாரி ஈட்டிமார் என்ற பெயரால் அழைக்கப்படுவார்.
(" The History and Culture of the Indian People,
By Prof R.C. Majumdar
The History shipbuilding in the sub-continent , By Prof R C Majumdar..)
இவைகளுடன் மேலும் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் பிரத்யோக கடற்படைப்பிரிவுகளும் கப்பல் வகைகளும் இருந்ததாக R.C.Majumdar
தனது நூலில் பதிவு செய்கிறார்.
(The History and Culture of the Indian People, By Prof R.C. Majumdar ..
The History shipbuilding in the sub-continent , By Prof R C Majumdar,)
தாரணி -
ஆழ்கடல் பகுதியில் அதிவேகமாகச் சென்று தாக்கும் போர்க்கப்பல்.
எந்த சூழலிலும் தாக்குப்பிடிக்கும் பிரத்யோக பயிற்சிபெற்ற கடற்படை வீரர்கள் இடம்பெறுவார்கள்.மிக மிக வலுவாக கட்டப்பட்ட கப்பல் இது. எதிரிகளின் கப்பல்களை முட்டி மோதி தகர்க்கும் திறன் பெற்ற கப்பல் வகை இது.
வஜிரா -
அளவில் சிறிய கப்பல்.
அதிவேகத்துடன் கடலில் பாய்ந்து சென்று தாக்கும் திறனுடையது.
திரிசடை -
மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கப்பல். பல அடுக்குகளும் தளங்களும் கொண்டது. ஆயுத சேகரிப்பு மற்றும் தளவாடங்கள், வீரர்கள் தங்கும் அறைகள் கொண்ட மிகப்பெரும் போர்க்கப்பல்.
இந்த மகத்தான கடற்படையைக் கொண்டுதான் சோழர்கள் பெரும் கடற்பரப்பை ஆதிக்கம் செய்தார்கள். தென்கிழக்காசிய நாடுகளை வென்றார்கள்.
இவ்வெற்றியின் நினைவாக இராஜேந்திரசோழன் கடாரம் கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வெற்றியின் நினைவாக கடாரம்கொண்டான் என்னும் பெயர் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சூட்டப்பட்டு இன்றும் அவ்வூர்கள் கடாரம் கொண்டான் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.