|

ஓம் காளி

Jul 06, 2024

*அதர்வண பத்ரகாளிக்குத் தலைமேல்*

 ஏழு நாகங்கள் உள்ளன ஏன்??

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மஹாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம் 

சரபர் நரசிம்மரின் பாதங்களை பிடித்து இரண்டாகக் கிழிக்க முயன்றபோது நரசிம்மத்தின் கோபம் மறைந்து சாந்தம் தவழ்ந்தது. நரசிம்மத்துக்கும் சரபத்துக்கும் 18 நாள் உக்கிரமான போர் நடைபெற்றதல்லவா? அப்போது சரபத்தை எதிர்க்க நரசிம்மர் அண்ட பேருண்டம் என்ற பறவை வடிவம் எடுத்தார். 

சரபப்பறவைக்கு விரோதி கண்ட பேருண்டம் என்ற பறவை ஆகவே, அந்த பறவை வடிவம் தாங்கி நரசிம்மர் போரிட்டார். அதனால் சரபருக்கு மேலும் கோபம் கொப்புளித்தது. அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப்பிரத்தியங்கரா என்று பத்திரகாளி உதித்தாள்.அப்படி உதித்த அவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கிவிட்டாள். 

சரபருக்கு சக்திகளாக விளங்குபவர் இருவர்.

1) பிரத்தியங்கரா,
2) சூலினி.

சரபர் நரசிம்மத்தை அடக்குவதற்கு உதவியாக அவதரித்தவள் பிரத்தியங்கரா! அவளே பத்ரகாளி! அவளே அதர்வண பத்ரகாளி!அதர்வண பத்ரகாளிக்கு ஆயிரம் முகங்கள்! இம்முகம் எல்லாம் சிங்கம் முகம் மாகவே இருக்கும். இரண்டாயிரம் கைகள்! பெரிய உடம்பு! கரிய நிறம்! நீல ஆடை! சூலம், கபலாம், பாசம், டமருகம் என்பன இவள் ஏந்தியுள்ள ஆயுதங்கள்.

இந்தத் தேவியை மனக்கண்ணால் மேற்கண்ட தோற்றங்களோடு தியானித்தால் எப்படிப்பட்ட பகைவனும் அழிவான்; சத்ருபயம் நீங்கிவிடும். தக்கன் வேள்வியை அழித்துவிட்டு வரும்படிச் சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியபோது, அவருக்குத் துணைநின்று உதவியவள் பிரத்தியங்கரா தேவியே! இவளை உபாசித்து இவள் அருளை மட்டும் பெற்றுவிட்டால் போதும், அப்புறம் இராம இலக்குவர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்டதால்தான் இந்திரஜிந் ‘நிகும்பலை’ என்னும் இடத்தில் மிக ரகசியமாக இவளை வேண்டி யாகம் செய்தான். 

அதனை ஜாம்பவான் மூலம் தெரிந்துகொண்ட அனுமன் தொடக்கத்திலேயே அந்தயாகம் நல்லபடி முடியாதவாறு அழித்து முளையிலே கிள்ளி எறிந்து விட்டான். மகாவிஷ்ணு மது கைடபர் என்ற அரக்கர் இருவரை அழிக்கத் துணை நின்றவள் இந்தத் தேவியே. இவளுடைய மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள் இரண்டு ரிஷிகள்.

 1) அங்கிரஸ் 
2) பிரத்தியங்கிரஸ். 

இந்த தேவி பற்றி ரிக்வேதத்தில் மந்திரங்கள் உண்டு. இவளை வழிபடும் மூலமந்திரம் இருபது அட்சரங்கள் கொண்டது இவளை வழிபடும் மாலா மந்திரம் பிரபஞ்ச சார தந்திரம் என்ற நூலில் உள்ளது. 

இந்தத் தேவிக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் எனவே இவளை இந்த வடிவத்தில் சிற்பமாக வடித்து வழிபட முடியாது. தாருகன் என்ற அரக்கனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கரா தேவியே!தாருகன் என்ற அசுரன் தன் இரத்தம் கீழே சிந்தினால் ஆயிரம் அசுரர்கள் தோன்றுமாறு வரம் பெற்றிருந்தான். இவன் சாகாவரம் கேட்டிருந்தானே தவிர பெண்களை அலட்சியம் செய்தான். 

ஒரு பெண் மூலம் தனக்கு அழிவு வரலாம் என்று இவன் நினைக்கவே இல்லை எனவே இவனைக் கொல்ல ஆறு தேவர்கள் தங்கள் சக்திகளை ஒன்று திரட்டினர். 

1) விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவி
 2) பிரம்மாவின் சக்தி பிராமி 
3) சிவனது சக்தி மகேஸ்வரி 
4) குமரனின் சக்தி கெளமாரி 
5) இந்திரனின் சக்தி இந்திராணி 
6) எமனுடைய சக்தி வராகி 
7) சாமுண்டி என்ற ஏழு சக்திகள் இணைந்து தாருகனை அழித்தன.

 இந்த ஏழு சக்திகளின் அடையாளங்களே அதர்வண பத்ரகாளியின் மேல் உள்ள ஏழுதலை நாகங்கள் எனக் கருதலாம். 

பொதுவாக நான்கு வேதங்களில் அதர்வண வேதம் என்பது நோய், பிணி தீர்க்கும் மந்திரங்கள், மந்திர தந்திரங்கள், மாயாஜாலங்கள் , தேவதா சக்தியை வசியப்படுத்தும் மந்திரங்கள் இவைகளை உள்ளடக்கியது.

அதர்வண வேதங்களின் மூலம் தேவதைகளை உபாசித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை நோய் தீர்க்கவும், பில்லி, சூன்யம், ஏவல் போன்றவைகளினால் அவதிப்படும் மக்களை காக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ரிஷிகளின் வாக்கு.

 எக் காரணம் கொண்டும் தேவதா சக்தியை கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால், அதே தேவதா சக்தி அவரையும் , அவர் குடும்பத்தையும் பாழ்படுத்திவிடும். இது கண்கூடு.

சரபேஸ்வரரின் நெற்றியில் இருந்து தோன்றியவள் தான் பிருத்யங்கராதேவி என்ற அதர்வண பத்ரகாளி. உருவத்தில் பயம் தென்பட்டாலும் , எல்லோரையும் காக்கும் கருணை கொண்ட தேவியாக இருக்கிறார்.பிருத்யங்கராதேவி நரசிம்மரின் கோபத்தை தணித்து சாந்தப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரத்யங்கராதேவி வழிபாடு இருக்கிறது. 

அமாவாசை இரவில் யாகங்கள் , பூஜைகள் சிறப்பாக நடைபெறும். நிகும்பல யாகம் என்று சொல்லப்படும் இந்த யாகத்தில் சிகப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகிறது என்பது விஷேசம். அமாவாசை இரவு யாகத்தில் கலந்து கொள்பவர்களின் நோய் , பில்லி சூன்ய, ஏவல் குறைபாடு உள்ளவர்கள் குணமாவதாக நம்பிக்கை. நமக்கு எதிராக துரோகம் செய்பவர் எண்ணம் நிறைவேறாது. 

பத்ரகாளி கோவில்கள் நிறைய இருந்தாலும், அதர்வண பத்ரகாளி என்ற பெயர் பிருத்யங்கராதேவி என்ற சக்தியை சாரும்.

அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட மந்திரங்களைக் கொண்டு, யாகங்கள் நடைபெறுவதால் பிருத்யங்கராதேவி அதர்வண வேதத்தின் அதிபதியாகவும் விளங்குகிறார்.



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us