தமிழகத்தில் கொற்றவை வழிபாடு
Oct 02, 2025
"கொற்றவைத் திருநாள் "
தமிழர்களின் பழந்தெய்வமாக அறியப்படும் பழையோள் என்று இலக்கியங்கள் குறிப்பிடும் கொற்றவை.
பாலை நிலத் தெய்வமாக அறியப்பட்டாலும்
அனைத்து தினைமக்களின் வெற்றிக் கடவுளாய் கொற்றவை போற்றப்படுகிறார்..
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்
கொற்றவை நிலை சுட்டப்படுகிறது.
"மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’’
போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றிக்காக கொற்றவையை வணங்கிச் செல்லும் நிலையே கொற்றவை நிலை என தொல்காப்பியர் வரையறை செய்கிறார்.
அடர்ந்த காட்டில் உறைபவள் என்று அகநானூறு கூறுகிறது.
" ஓங்கு புகழ் கானமர் செல்வி "
குறுந்தொகை கொற்றவையை
" விரல் கெழு சூலி" என்றும்
கலித்தொகை கொற்றவையை
" பெருங்காட்டு கொற்றவை " என்றும்
பரிபாடல்
" நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவை கோலங்கொண்டு " என்றும்
மேலும் பல இலக்கியப் பாடல்கள் கொற்றவையின் புகழ் பாடுகிறது.
சிலப்பதிகாரத்தில் கொற்றவைக் குறித்து ஏராளமான செய்திகள் காணப்படுகின்றன..
மதுரைக்கு வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் தங்குவதே ஒரு கொற்றவை கோவிலில்தான்.
“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,மையறு சிறப்பின் வான நாடி ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு - என் "
கொற்றவையின் தோற்றம், வழிபாடு,பெருமை, சிறப்பு.
என்று சிலப்பதிகாரம் நீண்ட பட்டியல் தருகிறது..
மறவர்கள் வில்லேந்தி போருக்குச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் கொற்றவை.
மறவர்கள் தரும் அவிப்பலியை ஏற்பவள்.
பிறை சூடியவள் , நெற்றிக் கண், பவள வாய், முத்துப் போன்ற சிரிப்பு, நஞ்சுண்டு கறுத்த கழுத்து, பாம்பைக்கொண்ட மார்புக்கச்சு, வளைகள் அணிந்த கையில் சூலம், புலித்தோல் இடையாடை,
இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், கலைமானை ஊர்த்தியாக கொண்டவள், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, எருமைத்தலையின் மேல் நிற்பவள், அனைவரும் வணங்கும் குமரி.
இவ்வாறாக கொற்றவையின் நிலை குறித்து சிலம்பு கூறுகிறது.
மேலும் சிலப்பதிகாரம் கொற்றவையின் பல்வேறு பெயர்களை பட்டியல் இடுகிறது..
கலையமர் செல்வி,
நீலி, அணங்கு, கொற்றவை, பாகம் ஆளுடையாள், அமரி, குமரி, கவுரி, சூலி, ஐயை, கண்ணுதல் திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள்.
இவ்வாறான பெயர்களும் கொற்றவவைக்குரியதே.
புறப்பொருள் வெண்பாமாலையும்
கொற்றவையான் தோற்றத்தைக் கூறும்..
சிங்கக்கொடியும் பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாகக் கொண்டு வெற்றி தரும் சூலத்தை உடையவள்.
இவ்வாறாக கொற்றவை வழிபாடு பழங்காலம் தொட்டே தமிழர்களின் பாரம்பரியமாக இருந்தது..
கொற்றவை நாள் என்பது வெற்றித் திருநாளாகும்.