|

பேரரசர் அவதார திருநாள் -1350

Apr 05, 2025

செந்தலைக் கல்வெட்டுகளிருந்து 
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 
வென்ற களங்களில் சில.., 

* அழுந்தியூர் 

தற்போது ' அழுந்தூர்' எனும் பெயரில் திருச்சி - விராலிமலை நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. 

கயல்சேர் வேல் கொடியுடைய சுவரன்மாறன் அழுந்தூர் களத்தில் எதிரிகளை வென்று,  அவர்களின் இரத்தத்தால் நனைந்து கிடந்த நிலத்தை கருமையான யானைகளைக் கொண்டு உழுதான் என்று பாடல் குறிப்பிடுகிறது. 

* மணலூர் 

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது மணலூர்பேட்டை என்றழைக்கப்படுகிற ஊராக இது இருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்களின் பெரும்பான்மைக் கருத்து. 

மணலூர் போரில் முத்தரையரால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின்  சதைகளையும்,  பிண்டங்களையும்   கழுகுகள் பறந்து வந்து உண்டன என்று பாடல் குறிப்பிடுகிறது. 

* கொடும்பாளூர் 

விராலிமலை அருகேயுள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த வேளிர்களின் தலைநகர். 

பாண்டியர்கள் கொடும்பாளூர் வேளிரை வெற்றி கொண்ட பிறகு , சுவரன் மாறனின் படைகள் பாண்டியர் மீது போர்த் தொடுத்து கொடும்பாளூரை வேளிர்களிடம்  மீட்டுக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.  

* வஞ்சி 

சேரர்களுடன் அவர்களின் தலைநகரில் நடைபெற்ற போர் . சிறுவயதினனாக இருந்தபோதே சுவரன் மாறன் இப்போரில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

* காரை 

திருப்பத்தூர் அருகேயுள்ள காரையூர். 

காரைப் போரில் வேல் தாங்கி நின்ற வல்லக்கோனாகிய சுவரன்மாறனின் கரங்கள் கார்மேகத்திற்கு ஒப்பாக பாடப்பட்டுள்ளது. 

தலைவனின் பிரிவில் வாடி நிற்கும் தலைவி பாடும் அகத்திணைப் பாடலாக இது  அமைந்துள்ளது. 

* மறங்கூர்

சுவரன்மாறனின் எதிரிகளின்  குடலை உண்ட பறவைகள் இரத்தம் தோய்ந்த சிறகுகளுடன் பறந்து சென்றதாக போர்க்களக் காட்சி பதியப்பட்டுள்ளது. 

* செம்பொன்மாரி 

எதிரிகளின் அரண்களை அழித்த சுவரன்மாறனின் களிறுகள் வெற்றிக் களிப்பில் அந்நகரை வலம் வந்ததாக  பாடல் அமைந்துள்ளது. 

* புகழி 

கரூர் அருகேயிருந்த நகரம். 

சேரருடன் போரிட்ட சுவரன் மாறனின் வில்லாற்றலை இப்பாடல் குறிப்பிட்டுள்ளது. 

* மணிப்பாறை 

மணப்பாறை நகரம். 

" பல்லவன் வெல்லத் 
தென்னவன் முனையைக் 
கெடச் சென்ற மாறன் ... "

எனும் பாடலால் மணப்பாறையில் பல்லவர்களுக்காக பெரும்பிடுகு முத்தரையர் பாண்டியரை வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. 

* கண்ணனூர் 

கோநாட்டுக் கண்ணனூர் எனும் கூற்றால் திருமயம் வட்டத்தில் உள்ள கண்ணனூர் என்பது தெளிவாகிறது. 

சுவரன்மாறன் யானை மீதமர்ந்து களம் புகுந்த சேதியறிந்த பகைவர்கள் அருகிலுள்ள குன்றுகளுக்குள் சென்று பதுங்கினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

* காந்தளூர் 

சேர நாட்டு கடற்கரை நகர். இராசராச சோழனால் பின்னாட்களில் வெற்றி கொள்ளப்பட்ட நகரமும் கூட... 

தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தஞ்சையில் இருந்து இடம்பெயர்வடைந்த  முத்தரையர்கள்  ' அரையர், வலன்' எனும் சாதிப் பெயர்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் . தங்களின் மூதாதையர் காலத்தில் தஞ்சையிலிருந்து கடற்போர் நிமித்தம் தாங்கள் இடம்பெயர்ந்ததாக அவர்கள் கூறுகின்றனர் . 

* அண்ணல்வாயில் 

தற்போதுள்ள அன்னவாசல் நகரம் . 

வெற்றியின் பிறகு அந்நிலத்தை சுவரன்மாறன் கரும் பகடு கொண்டு  உழுவித்தான் என்று பாடல் அமைந்துள்ளது. 

* திங்களூர் 

திருவையாறு அருகேயுள்ள திங்களூர். 

பாண்டியர்( தென்னவர்) களின் யானைப் படையை சுவரன்மாறனின் படைகள் வெற்றி கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 

* மாமங்கை

பாண்டிய மன்னனை கொன்று அவனின் மனைவி உடன்கட்டை ஏறக் காரணமானான் என்று குறிக்கப்பட்டுள்ளது. 

" .. தென்னாடர் காதலியார் தீய்நாட 
வாய்சிவந்த மின்னாடு... " 

என்ற வரிகள் இதை உணர்த்துகிறது.

நியமம் பிடாரி கோயில் கல்வெட்டுகள் முழுமையாக கிடைத்திருந்தால் பெரும்பிடுகு முத்தரையரின் போர்க்கள வெற்றிச் செயல்களும், செய்திகளும் இன்னும் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும்... ஆனால் அழிவின் காரணாக அதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போயிற்று.  

#மே_23
#முத்தரையர்_1350


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us