கல்வெட்டியல் வரலாற்றில்....
Aug 10, 2025
ஒரு இனத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதில் மொழிக்கு முதலிடம் உண்டு. அம்மொழியின் எழுத்து வரிவடிவங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியே அம்மொழியின் பழமையைப் பதிவுசெய்கிறது.
இம்மாதிரியான தொடர்வளர்ச்சி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.
ஆரம்பத்தில் குறியீடுகள். பிறகு பழந்தமிழான தமிழி எழுத்துக்கள். தமிழி எழுத்துக்களின் பல்வேறு வளர்ச்சி வரிவடிவங்கள். பிறகு வட்டெழுத்து. பிறகு தற்காலத் தமிழ் எழுத்து வரிவடிவம். இவ்வாறான நீண்ட படிநிலைகளைக் கொண்டு இன்றும் தன்னை தக்கவைத்துக்கொண்ட பெருமை தமிழ் மொழிக்குமட்டுமே உண்டு.
மிகத் தொன்மையான மொழிகளில் இன்றும் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உயிர்ப்போடு இருப்பது தமிழ் மொழி மட்டுமே.
இந்த வளர்ச்சி படிநிலையை பல்வேறு கல்வெட்டுகளில் நாம் காணமுடியும்.
பழந்தமிழி எழுத்து வடிவம்.
வளர்நிலை தமிழி வடிவம்.
தமிழி + வட்டெழுத்து.
வட்டெழுத்து + தற்காலத்தமிழ்.. தமிழி + வட்டெழுத்து + தற்காலத்தமிழ். இவ்வாறான கல்வெட்டுகள் ஏராளமாக தமிழ்நாட்டில் உண்டு.
உதாரணமாக..
பழந்தமிழி எழுத்துக்கள் பல்லவர் கால தற்காலத் தமிழ் எழுத்துக்களுடன் கலந்துள்ள ஒரு கல்வெட்டு.
பழங்காலத் தமிழி எழுத்தும் - தற்காலத் தமிழ் எழுத்தும் - இணைந்துள்ள கல்வெட்டு இது.
வல்லம் குடவரையில் மகேந்திரவர்ம பல்லவனின் கல்வெட்டு. கல்வெட்டின் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.
இக்கல்வெட்டில் உள்ள ஒரு சிறப்பு யாதெனில் தற்காலத் தமிழ் எழுத்துக்களும் பழங்காலத் தமிழி எழுத்துக்களும் கலந்து காணப்படுவதேயாகும்.
அதாவது ..
தற்காலத் தமிழ் எழுத்து வரிவடிவங்கள் உள்ள இக்கல்வெட்டில் ஒரு சில எழுத்துக்கள் பழங்காலத் தமிழி எழுத்து வரிவடிவத்தில் உள்ளன.
கல்வெட்டு வாசகம்..
"சத்துரும் மல்லன் குணபரன் மயேந்திரப் பொத்தரெசரு அடியான் வயந்தப்பிரி அரெசரு மகன் கந்தசேன ன் செயிவித்த தேவகுலம்"
இக்கல்வெட்டில்..
வரி - 1
சத்துரு என்பதில் #ச என்னும் தமிழ் எழுத்து பழங்காலத் தமிழி எழுத்தான #𑀘 என்னும் வரிவடிவத்தில் காணப்படுகிறது.
அதாவது #𑀘த்துரு என்று இருக்கிறது.
வரி - 2
மயெந்திரப் என்னும் சொல்லில் #யெ என்னும் எழுத்து பழங்காலத் தமிழி எழுத்தான #𑀬𑁂𑁆 என்னும் வரிவடிவத்தில் காணப்படுகிறது.
அதாவது #ம𑀬𑁂𑁆ந்திரப் என்று இருக்கிறது.
வரி - 2
அடியான் என்னும் சொல்லில் #அ என்னும் எழுத்து பழங்காலத் தமிழி எழுத்தான #𑀅 என்னும் வரிவடிவத்தில் காணப்படுகிறது. அதாவது #𑀅டியான் என்று
இருக்கிறது. இதேவரியில் #அரசெரு என்பது #𑀅ரசெரு என்று உள்ளது.
வரி - 2
வயந்த என்னும் சொல்லில் #வ என்னும் எழுத்து பழங்காலத் தமிழி எழுத்தான #𑀯 என்னும் வரிவடிவத்தில் காணப்படுகிறது. அதாவது #𑀯யந்த என்று
இருக்கிறது.
வரி - 4
செயிவித்த என்னும் சொல்லில் #வி என்னும் எழுத்து பழங்காலத் தமிழி எழுத்தான #𑀯𑀺 என்னும் வரிவடிவத்தில் காணப்படுகிறது. அதாவது #செயி𑀯𑀺த்த என்று இருக்கிறது. அதே வரியில் #தேவகுலம் என்பது #தே𑀯குலம் என்று உள்ளது.
--------------------------------------------------
கீ.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பழந்தமிழி எழுத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
பழங்காலத் தமிழி எழுத்தும் தற்காலத் தமிழ் எழுத்தும் அருகருகே இருப்பது பாட்டனும் பேரனும் சேர்ந்து இருப்பதுபோல் ஒரு காட்சி.
பாட்டனுக்கு வயது 2580.
பேரனுக்கு வயது 1425